சென்னை: திருநெல்வேலி அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தில் 'அதிவேக நிலத்தடி நீர் மறுஊட்டல்' தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இதன்மூலம் வெள்ளம், வறட்சியின் பாதிப்பை ஒருசேரத் தணிக்க முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பருவமழை பெய்தது. இதனையடுத்து அருகிலிருந்த சிறு குளம் நிரம்பியதையடுத்து, உபரிநீர் ஆயன்குளம் கிராமத்தில் உள்ள திறந்தவெளி விவசாயக் கிணறுக்குத் திருப்பிவிடப்பட்டது.
வினாடிக்கு ஏறத்தாழ 1,500 முதல் 2,000 லிட்டர் வீதம் நீர் திருப்பிவிடப்பட்ட போதும், பல வாரங்களாகியும் கிணறு நிரம்பாமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிவேக மறுஊட்டல் தொழில்நுட்பம் முன்னெடுப்பு
பின்னர் இது குறித்து சென்னை ஐஐடியின் கட்டடப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது 'அதிவேக மறுஊட்டல் தொழில்நுட்பம்' ஒன்றை செயல்படுத்தலாம் எனச் சென்னை ஐஐடி குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
இது குறித்து உதவிப் பேராசிரியர் டாக்டர் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன் பேசுகையில், “பெரும் சேதத்தை விளைவிக்கும் அல்லது வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரை முறைப்படுத்தி மறுஊட்டல் செய்வதால் நிலத்தடி நீராகச் சேமிக்க முடியும். பின்னர் கோடைக் காலங்களில் மீண்டும் நிலத்தடி நீரை மீட்டெடுக்க முடியும்.
இந்த அதிவேக மறுஊட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், இப்பிராந்தியம் தனித்துவமிக்க நீர் நீலவியல் அமைப்புடன் இருப்பது சிறப்பம்சம். பெரும்பாலான இதரப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீரை அதிகளவில் உட்செலுத்த முடியாது, அவை எளிதில் நிரம்பிவிடக் கூடியவை.
வண்டல்மண் தடுப்பான்கள் வடிவமைப்பு
மறுஊட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயன்குளம் கிராமத்தில் டஜன் கணக்கில் கிணறுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் லிட்டர் வரையிலான நீர் மறுஊட்டல் செய்யப்படும்.
இதிலும் சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. மேல்கூரை மழைநீர் சேகரிப்பு முறையில், தூய்மையான நீர் கிடைக்கிறது. இங்கு மழைநீருடன், வண்டல் மண்ணும் சேர்ந்துவந்து கிணறுகளில் நீண்ட காலத்திற்குத் தேங்கிவிட வாய்ப்புண்டு. எனவே, கிணறுகளுக்குள் மறுஊட்டலுக்காக நீரை செலுத்துவற்கு முன்னரே வண்டலைக் களைய வேண்டியுள்ளது.