தமிழ்நாடு

tamil nadu

ராஜ்யசபா தேர்தல்... யாரை நிறுத்தப் போகிறது அதிமுக?

இந்த முறை எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டுமென்று முனுசாமி ஏற்கனவே ஒரு துண்டு போட்டுவைத்தார். இதே போல கட்சியின் சீனியரான தம்பிதுரையும் ராஜ்யசபா வேட்பாளர் இடத்துக்கு தன்னை முன்னிறுத்திவருகிறார். இதேபோல ஓபிஎஸ் ஆதரவாளர்களான நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ராஜ்யசபா சீட்டுக்காக கட்சி தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர்.

By

Published : Mar 3, 2020, 11:08 PM IST

Published : Mar 3, 2020, 11:08 PM IST

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

அதிமுக ராஜ்யசபா எம்பி பதவியை பிடிக்க போட்டா போட்டி நிலவி வருகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள அதிமுகவை சேர்ந்த முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா ராமசாமி, செல்வராஜ், விஜிலா சத்தியானந்த், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி .கே. ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியோடு முடிவடைகிறது.

இதனையடுத்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு ராஜ்யசபா உறுப்பினருக்கு 34 தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுகவுக்கு தலா மூன்று இடங்கள் கிடைக்கும்.

திமுக தனது ராஜ்யசபா வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சியான அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக யாரை நிறுத்தப்போகிறது என்பதே அரசியல் களத்தில் சூடான விவாதமாக உள்ளது.

அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர் ரேஸில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, தம்பிதுரை, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், ஏசி சண்முகம் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்திற்கு பிறகு எடப்பாடியின் கை அதிமுகவில் ஓங்கிவிட்டது.

தங்களுக்கு தேவையான பிரதிநிதித்துவம் கட்சியில் கிடைக்கவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புலம்பி வந்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக தன்னை நிறுத்த வேண்டுமென்று கே.பி. முனுசாமி, முன்னாள் எம்.பி. தம்பிதுரை ஆகியோர் முயன்றுவந்தனர். ஆனால் கட்சி மேலிடம் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தது.

இந்த முறை எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டுமென்று முனுசாமி ஏற்கனவே ஒரு துண்டு போட்டுவைத்தார். இதே போல கட்சியின் சீனியரான தம்பிதுரையும் ராஜ்யசபா வேட்பாளர் இடத்துக்கு தன்னை முன்னிறுத்திவருகிறார். இதேபோல ஓபிஎஸ் ஆதரவாளர்களான நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ராஜ்யசபா சீட்டுக்காக கட்சி தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர்.

இப்படி இருக்கையில் பாஜக சிபாரிசு என ஏ.சி. சண்முகம், ஜி. கே. வாசன் ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது. ஏற்கனவே தேமுதிக தனக்கு ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவருகிறது. நிலைமை இப்படி இருக்கையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. எனவே கூட்டணியை தக்கவைக்க அதிமுக யாரை வேட்பாளராக நிறுத்தப் போகிறது என்பதே அரசியல் வட்டாரத்தின் 'ஹாட் டாபிக்’.

ABOUT THE AUTHOR

...view details