சென்னை:தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ஆம் தேதி கூட உள்ள நிலையில், சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும். ஓ பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் இருக்கைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே இரண்டு முறை சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்தோம். இன்று மூன்றாவது முறையாக கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில் சபாநாயகர், எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்குவது பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் எங்களுக்கு ஒதுக்க வேண்டிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். இதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்தபோது, எதிர்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் ஸ்டாலின், துணைத் தலைவராக இன்றைய நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகனுக்கு இருக்கை ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.