சென்னை: அம்பத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் வி.அலெக்ஸாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "திராவிடம் என்று கூறுவார்கள், பிறகு சனாதனம் என்று கூறுவார்கள். இதை இரண்டையும் கூறி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விரும்பத்தகாத, வெறுக்கத்தக்கதாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இது ஒரு திசை திருப்புகின்ற முயற்சி. தமிழகத்தில் பல பிரச்னைகள் கொழுந்து விட்டு இருக்கிறது. அதனால் இது போன்ற விஷயங்களில் கவனம் திரும்பக் கூடாது. அனைவரையும் திசை திருப்புகின்ற முயற்சியாக சனாதனத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
இப்போது ஒரே நாளில் ஒரே தேர்தல் வருகிறது. இது ஒரு நல்ல விஷயம். 1952ல் 11 கோடி ரூபாய் செலவு செய்து தேர்தல் நடத்தப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் 60,000 கோடி ரூபாய் செலவானது. 60 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே உள்ளது, 11 கோடி ரூபாய் எங்கே உள்ளது. இவை அனைத்தும் யாருடைய பணம், உதயநிதியின் பணமா? அல்லது முதலமைச்சர் ஸ்டாலின் பணமா? மக்களுடைய வரிப்பணம். எதற்கு பயப்படுகிறார்கள். தைரியமாக சொல்ல வேண்டியது தானே.
எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வையுங்கள் மீண்டும் எங்கள் ஆட்சி தான் வரும் என்று உங்களால் சொல்ல முடியுமா? இப்போது நான் சொல்கிறேன். 2024ம் ஆண்டில் அல்ல, நாளைக்கே தேர்தல் வைத்தாலும் மீண்டும் அதிமுகவின் ஆட்சிதான் மலரும். அதை எங்களால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் அதை உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? இப்போது தேர்தல் வைத்தால் திமுக நிரந்தரமாக வீட்டுக்கு போய்விடும்.