அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்று கூறப்பட்டதிலிருந்தே அக்கட்சியில் பலதரப்பினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இருப்பினும் அதை அனைத்தையும் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பேசி சரிக்கட்டி விட்டதாக கூறிவந்தனர். ஆனாலும், சிக்கல்கள் நீடித்தபடியே உள்ளது.
37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த அதிமுகவில் இந்த தேர்தலில் 6 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இத்தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் அவர் இன்று மாலை திமுகவில் இணைய உள்ளதாக கூறியுள்ளார். வேட்பாளர்கள் அறிவிப்பின்போது மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா தனது மகன் சத்யனுக்கு சீட் வழங்க வேண்டும் என தகராறில் இறங்கியதும், தனது தரப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசனுக்கு சீட் வழங்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார் கேட்க, வெளிப்படையாகவே பிரச்னைகள் வெடித்து கைகலப்புவரை சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், இரவு 10 மணி வரை வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு தாமதம் ஏற்பட்டு, பின்னர் மதுரை தொகுதிக்கு ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், மதுரை மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு மாவட்ட செயலாளராக அமைச்சர் உதயகுமார் சேர்க்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஒரு வழியாக பிரச்னை தீர்ந்தது என்றாலும், இன்று மீண்டும் கட்சியினருடன் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, மதுரை மூன்றாக பிரிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், அமைச்சர் உதயகுமாருக்கு வழங்கப்பட்ட மாவட்ட செயலாளர் பொறுப்பு திரும்பப் பெறப்படுகிறது என்ற விவரத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்தனர்.
ஆக, மதுரை விவகாரம், ராஜகண்ணப்பன் திமுகவில் இணைய உள்ள விவகாரம் மட்டுமல்லாமல் இன்னும் பல பிரச்னைகள் அதிமுகவில் வெடிக்க தயாராக உள்ளதாக அக்கட்சியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர். இதன் மூலம் அதிமுகவில் நீடிக்கும் உள்கட்சிப் பூசல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவை அனைத்தையும் சமாளித்து தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.