சென்னை:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், "கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், நேற்று (ஆக்.17) தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன் காவல் துறையை விட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.