சென்னை: நாமக்கல் மாவட்டத்தில், அரசுத்துறை மற்றும் அரசு சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி திமுக நிர்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையத்தில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல், மாநிலத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பி உள்ள புகாரில், “நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டம், மாவட்ட ஊராட்சிக் குழு ஆறாவது வார்டில் நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில், வாக்காளர்களின் வாக்கை கவர்வதற்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வாக்காளர்களிடம் சொல்லி வருகின்றனர்.
அரசுத் துறைகளை தவறாகப் பயன்படுத்தி, நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தால் 5,000 ரூபாய் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அரசு அலுவலர்கள் நேரடியாக உங்கள் இல்லங்களுக்கே வந்து உங்களை உறுப்பினர்களாக இணைப்பார்கள். அதன் பயன் உடனடியாக உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லியுள்ளனர்.
அரசு சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பு தமிழ்நாடு அரசின் அரசு சின்னத்தை திமுக தலைவர்களோடு அச்சிட்டு தவறான நோக்கத்தோடு ஒரு பொய்யான தகவலைச் சொல்லி அதற்குண்டான விண்ணப்பத்தை திமுக மாவட்டச் செயலரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று, பொதுமக்களிடத்தில் சொல்லி நிர்வாகிகள் வாக்குகளைப் பெற முயற்சிப்பதும், பொய்யான தகவல்களை மக்களிடத்தில் பரப்புவதையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தித் தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிக்க வேண்டும்.
அரசு சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பு மேலும் வீடியோவில் உள்ள நபர்களை உடனடியாகக் கண்டறிந்து தேர்தலில் முறைகேடு நடப்பதைத் தடுத்து நிறுத்தி உடனடியாக இச்செயலில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுத்தும், அரசின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் நபர்களின் மீதும் இரு குழுவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் நபர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம்