சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அரசு ஊழியர்கள் சங்கத்தினருடன் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அவர்களது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்று, ஊழியர்கள் அரசுக்குஒத்துழைப்பு நல்க வேண்டும். திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் தான் அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகைகள் தரப்பட்டுள்ளன. அரசின் நிதி நிலைக்கு ஏற்ப நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி வருகிறது.
அமமுக, நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் இரட்டை இலையையும் அதிமுகவையும் எதிர்த்து போட்டியிட்டு கட்சியை முடக்க நினைத்தது. அதிமுகவை உரிமை கொண்டாட அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அதிமுகவில் உறுப்பினர்களாக இல்லாத சசிகலா, தினகரன் எப்படி அதிமுகவை மீட்போம் என்று கூற முடியும். அவர்களின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டு உள்ளனர். டி.டி.வி. தினகரனின் கருத்துகளை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.