சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வியாண்டிற்கு இன்று (ஆக 20) முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக முனைவர் ரத்தினகுமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தொலைநிலைக்கல்வி குழுமத்தின் அனுமதியோடு தமிழ்நாட்டில் தொலைநிலை கல்வியை 2021-22ஆம் கல்வியாண்டில் வழங்க அனுமதிக்கப்பட்ட ஒரு சில பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று.
வழங்கப்படும் படிப்புகள்
இப்பல்கலைக்கழகம் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை இன்று (ஆக 20) முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வியாண்டிற்கு இன்று (ஆக 20) முதல் மாணவர் சேர்க்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 58 படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதில் 29 இளங்கலை படிப்புகள், 19 முதுகலை படிப்புகள், 10 பட்டயப் படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில், மற்றப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இணையான கல்வியை வழங்கும் வகையில் அதிகப்படியான படிப்புகளை பருவ முறையில் வழங்குகிறது.