சென்னை :ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வு மாதிரிகளை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறைகளின் அமைச்சர் தங்கம் தென்னரசு வரும் 8 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
சுமார் 169 ஆண்டுகள் பழமையான சென்னை அரசு அருங்காட்சியகமானது, இயற்கை சார் வரலாறு மற்றும் பண்பாடுசார் வரலாறு ஆகிய இரு துறைகளையும் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களை கொண்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் 75ஆவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பாக, சென்னை அரசு அருங்காட்சியகம் இந்திய விடுதலைப் போராட்டம் என்ற சிறப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
கண்காட்சி ஏற்பாடு
சுதந்திர இயக்கத்தில் அவர்களை அர்ப்பணித்த போராளிகள் மற்றும் புரட்சியாளர்கள் தொடர்பான ஏராளமான கலைப்பொருட்கள், தபால்தலைகள், ஓவியங்கள், புகைப்படங்கள் போன்றவை இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆதிச்சநல்லூர் அரும்பொருட்களையும் கீழடி அகழாய்வு மாதிரிகளையும் காட்சிப்படுத்தும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வுலகின் மிகத் தொன்மையான, சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, இரண்டு நாகரிகங்களைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்தைய தமிழர்களின் மகத்தான மற்றும் தன்நிகரற்ற செயல்திறனை இக்கண்காட்சி பிரதிபலிக்கும். மட்கலன்கள் செய்தல், உலோக வார்ப்பு, கல், மரம் மற்றும் உலோக வேலைபாடுகள், சாகுபடி, நெசவு, போன்றவற்றில் அம்மாந்தர் கொண்டிருந்த நிபுணத்துவமும் இக்கண்காட்சியின் வழியே வெளிக்கொணரப்படும்.
இதையும் படிங்க : வெள்ளத்தில் சிக்கிய கோயில் பாதுகாவலர்கள் மீட்பு