விஜயகாந்த் குறித்து நடிகைகள் நளினி மற்றும் நிரோஷா உருக்கம்.. சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் டிச.28ஆம் தேதி காலமானார். இந்த செய்தி தமிழ்நாட்டு மக்கள், திரையுலகினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. மேலும், விஜயகாந்த் மறைவைத் தொடர்ந்து நாடும் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில், நேற்று (டிச.29) காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று (டிச.29) நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நடிகை நளினி மற்றும் நிரோஷா உள்ளிட்டோர் விஜயகாந்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை நளினி கூறுகையில், “இன்று நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள். நீங்கள் இவ்வளவு நேரம் இப்படி நிற்பதைப் பார்த்திருந்தால், இங்கு படுத்திருக்கும் எனது அண்ணன் விஜயகாந்த், அப்படியெல்லாம் விட்டிருக்க மாட்டார். முதலில் நீங்கள் அனைவரும் சௌகரியமாக இருக்கிறீர்களா? என்பதைத் தான் முதலில் பார்த்திருப்பார். இந்த வேலைகளை எல்லாம், சாப்பிட்ட பின்னர் செய்யுங்கள்.. என்று கூறியிருப்பார்.
உங்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு நலம் விசாரித்து இருந்திருப்பார். எவ்வளவு பிரச்னையாக இருந்தாலும் என்னிடன் தயங்காமல் சொல், நான் இருக்கிறேன் எனக் கூறுவார். அப்படிப்பட்ட ஒரு தூண் நம்மை விட்டு கடவுளிடன் சென்றுவிட்டார் என்பதை நினைக்கும் போது, மிகவும் வருத்தமாக உள்ளது. அனைவரும் கூறுவர், பாரி வள்ளலைப் பார்த்ததில்லை என்று, ஆனால் இங்கு படுத்திருக்கும் எனது அண்ணன், எண்ணிலடங்கா உதவிகளைச் செய்துள்ளார்.
எனக்கெல்லாம் மிகுந்த தைரியமாக இருந்திருக்கிறார். நான் உனக்காக இருக்கிறேன் எனக் கூறுவார். மனதார என்னைத் தங்கையாக ஏற்றுக்கொண்டவர். அவர் இன்று இல்லை என நினைக்கும் போது என் மனம் வெடிக்கிறது. அந்த குடும்பத்திற்கு நாம் அனைவரும் அவர்களுக்காக இருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும்” என உணர்ச்சிப் பொங்க பேசினார்.
இதைத்தொடர்ந்து, நடிகை நிரோஷா பேசுகையில், “நமது திரைத்துறை இப்படி ஒரு கேப்டனை இழந்துவிட்டது. இப்படி ஒரு கேப்டன் மீண்டும் வருவாரா? என்பது எனக்குத் தெரியாது. இப்பொழுது நான் இங்கு நிற்பதற்கு அவர்தான் காரணம். என்னை 'செந்தூரப்பூவே' படத்தில் நடிக்க வைத்தவரே, அவர்தான். அந்த படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பெயருக்கும் அவர்தான் காரணம். அவருக்கு ஜோடியாக சில படங்களில் நடித்துள்ளேன்.
அவரைப் போன்ற நல்ல மனிதரை எங்குமே பார்த்ததில்லை. பணம் சம்பாதிப்பதும், பெயர் சம்பாதிப்பதும் மிகவும் எளிது. ஆனால் நல்ல மனிதரைச் சம்பாதிப்பது தான் கடினம். அதை இன்று அவர் நிரூபித்துவிட்டார். நடிகருக்கு ஒரு பிரச்னை என்றால், அவரைத் தவிர வேறு யாரிடமும் சென்று கூறமுடியாது. அவர் மட்டுமே களத்தில் இறங்கி வேலை செய்வார். ஒரு நடிகருக்கு என்ன தேவையோ, அது அனைத்தையும் செய்து கொடுப்பார்” என்று அவருக்கு புகழாரம் சூடினார்.
இதையும் படிங்க:"மனிதநேயத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றிதான் இந்த கூட்டம்" - நடிகர் பார்த்திபன் புகழஞ்சலி!