சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்து இருந்தார்.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சீமானால் தான் 7 முறை கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்து இருந்தார். சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் தன்னை மிரட்டுவதாகவும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறி இருந்தார்.
இதையடுத்து நடிகை விஜயலட்சுமியிடம் தொடர் விசாரணை நடத்திய போலீசார், மேலும் அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். அதேநேரம் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பினர்.
ஆனால், சீமான் ஆஜராகாமல் விஜயலட்சுமி புகார் மீதான முழு விபரங்களையும் கோரினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை விஜயலட்சுமி, "இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்று விட்டேன்.
வழக்கை தொடர்வது, சென்னைக்கு வருவது இனி இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. போலீசாரின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார். இரண்டு வாரமாக வீட்டு காவலில் இருந்தது போல் இருந்தேன் செல்போன் கூட இல்லை.
சீமானுக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வியை ஒத்துக் கொண்டு செல்கிறேன். திமுக விளையாட்டு எனக்குத் தெரியாது. சீமான் ஃபுல் பவராக உள்ளார். சீமானை தற்போது ஒன்றும் செய்ய முடியாது. நான் சீமானிடம் காசு வாங்கவில்லை.
சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டு வருவது முடியவில்லை. அதனால் அவர் பவராக உள்ளார்" என்று தெரிவித்தார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றதாக கடிதம் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வருகிற 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில், சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஏனென்றால், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனிடையே, விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பினர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :"தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" - ஈபிஎஸ் ஆவேசம்!