சென்னை: இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங்கின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம், "இன் கார்". இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை ரித்திகா சிங், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரித்திகா சிங், "நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு என்னை மன்னிக்கவும். விமானம் தாமதமாக வந்ததால் நேரமாகி விட்டது. நீங்கள் ரொம்ப நேரமாக காத்திருந்ததற்கு மன்னித்து விடுங்கள். இந்தப் படம் கடத்தல் தொடர்பானது. படப்பிடிப்பு நடந்த காலம் ரொம்ப சவாலானதாக இருந்தது.
இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நிறைய உண்மையான விஷயங்களை இந்தப் படத்தில் காட்டி உள்ளோம். இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை உள்ளிட்டப் படங்களுக்கு பிறகு, தமிழ்ப் படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது. எனக்கு நிறைய தமிழ்ப்படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது.
ஆனால், படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நல்ல கதை அமைந்தால் நிச்சயமாக மீண்டும் நடிப்பேன். எனக்கு காமெடி படம் ரொம்பப் பிடிக்கும். நன்றாக இருக்கும். அதே மாதிரி சண்டை, ஆக்சன் கதாபாத்திரமும் பிடிக்கும். அந்த மாதிரி கதாபாத்திரம் வந்தாலும் நன்றாகத் தான் இருக்கும்" என்றார்.
ஏற்கனவே தேசிய விருது வாங்கிய நிலையில் இந்த திரைப்படத்திற்கும் விருது கிடைக்க வாய்ப்பு இருக்கா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த ரித்திகா, "அவார்டு கிடைக்குமா என்று தெரியாது. அதைப் பற்றி நான் எதுவும் யோசிக்கவில்லை. படம் எல்லோருக்கும் பிடித்தால் ஓ.கே. தான்" என்றார்.