சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த செவ்வாய்கிழமை சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (டிச.28) காலை காலமானார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அங்கு ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த நிலையில், பொது அஞ்சலிக்காக இன்று காலை 6 மணி அளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திலிருந்து சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, இறுதிச் சடங்கிற்காக தீவுத்திடலில் இருந்து பொதுமக்களின் அஞ்சலியோடு இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு, 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.