சென்னை:தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கௌதமி. சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அன்பழகன் தனது சொத்து ஆவணங்கள், பணம் ஆகியவற்றை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாகவும், எனக்கு ஆதராவாக பாஜகவில் யாரும் இல்லை எனவும் ஆகையால் தான் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை கௌதமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். இந்திய தேசத்தின் வளர்ச்சியில் என்னுடைய பங்கை அளிப்பதற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில் இணைந்தேன். என் வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்தாலும், எனது பணியை நான் சிறப்பாக செய்து வந்தேன்.
தற்போது வரை என்னுடைய வாழ்க்கையில் பல கற்பனை செய்ய முடியாத சோகங்கள் உள்ளன. இந்நிலையில் கட்சியிடம் இருந்தோ, கட்சி தலைவர்களிடம் இருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எனது நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டு, என்னுடைய வாழ்க்கையில் நான் சம்பாதித்த சொத்துகளை ஏமாற்றிய நபருக்கு கட்சியில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது எனக்கு தெரிய வந்துள்ளது.
என்னுடைய 17 வயதில் இருந்து சினிமா, தொலைகாட்சி, வானொலி, டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் கடந்த 37 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய எதிர்காலத்திற்கு தேவையான பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும், என்னுடைய மகளின் எதிர்காலத்துக்கு உதவுவதற்காகவும் நான் என்னுடைய வாழ்க்கை முழுக்க உழைத்துள்ளேன்.
நானும் என் மகளும் பாதுகாப்பாக செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஒரு கட்டம், ஆனால் சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார். நான் என்னுடைய தாய் தந்தையை இழந்து, கணவரையும் இழந்து ஆதரவற்றளாக மட்டுமின்றி, ஒரு கைக்குழந்தையை வைத்திருந்த தாயாகவும் இருந்தேன். அப்போது என்னுடைய தனிமையையும், பலவீனத்தையும் பயன்படுத்தி அழகப்பன் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அணுகினார்.