சென்னை:நம் வாழ்வில்பெரும் கணவுகளை காண நம்மை எப்போது ஊக்கப்படுத்துவதில் நிலாவும், நட்சத்திரங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. குழந்தை பருவத்தில் பெற்றோருடன் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு நிலாவை பார்த்து ரசித்து, அதன் அழகில் பிரம்மித்து, “ஏம்ப்பா நாம் நிலாக்கு போக முடியுமா?” என்ற கேள்வியை வாழ்வில் ஒருமுறையாவது நாம் அனைவரும் கேட்டிருப்போம்.
அத்தகைய கணவுகளுக்கு பதிலாக நிலவில் மனிதன் வாழமுடியுமா என்பதை தெரிந்துகொள்ள இஸ்ரோ முன்னெடுத்த முயற்சியாக இந்த ஆராய்ச்சிகள் அமைந்தன. அந்த வகையில் இதுவரை யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்தியா விண்ணில் செலுத்தியது.
பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதைக்குள் பல்வேறு கட்ட அடுக்குகளில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நேற்று (ஆகஸ்ட் 23) ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் சர்வதேச அளவில், நிலவில் அமைதியான முறையில் விண்கலத்தை தரையிறக்கிய 4 வது நாடு என்கிற பெருமையையும், தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது.
படிப்படியாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி, இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார். இந்தியாவின் இந்த பெருமைமிகு சாதனை நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா சாதனை:அந்த வகையில் தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தியுள்ளதாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது கூறித்து அவர் கூறுகையில், "அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
முதன்முறையாக, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தியுள்ளது. நீங்கள் எங்களை பெருமைப்படுத்தி உள்ளீர்கள். இஸ்ரோவுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டு உள்ளார்.