சென்னை:வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு அருகில் நிலை கொண்டிந்ருதது. இதனால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்தது. மேலும், பல இடங்களில் மரங்களும் சாலையில் விழுந்தன. முக்கிய சாலைகளில் நீர் தேங்கியதால் வெள்ளக் காடாக காட்சி அளித்தது.
இந்நிலையில், புயல் சென்னையை கடந்து ஆந்திர பகுதிக்கு சென்று விட்டது. சென்னையில் மழை நின்ற நிலையில், பல இடங்களிலும் தேங்கி நின்ற மழை நீர் வடியத் துவங்கியது. மேலும், தடை செய்யப்பட்டு இருந்த மின் விநியோகமும் ஒவ்வொரு பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் இன்னும் வடியாமல் உள்ளது.
நேற்று நடிகர் விஷால் சென்னை மழையால் தேங்கியுள்ள நீர் குறித்து ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், நான் இருக்கும் காரப்பாக்கம் பகுதியில் மழைநீர் மோசமாக சூழ்ந்துள்ளது.
உதவிக்கு அழைத்துள்ளேன். கரண்ட் இல்லை. தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றுமேயில்லை. மொட்டை மாடிக்கு சென்றால் தான் கொஞ்சம் சிக்னல் கிடைக்கிறது. எனக்கும், சிலருக்கும் இங்கு உதவி தேவைப்படுகிறது. சென்னையில் உள்ள மக்களின் கஷ்டத்தை உணர முடிகிறது. உறுதியாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதனுடன் தனது பகுதியில் நீர் தேங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், மீட்புக்குழுவினர் ரப்பர் படகு மூலம் நடிகர் விஷ்ணு விஷால், அவரது மனைவியும் விளையாட்டு வீராங்கனையுமான ஜூவாலா கட்டா, நடிகர் அமீர் கான் ஆகியோரை மீட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் படகில் பத்திரமாக அழைத்துச் செல்லும் புகைப்படத்தையும் விஷ்ணு விஷால் சமூக வலைத்தள பக்கத்தில் பகிந்துள்ளார்.
அந்த பதிவில், “எங்களைப் போல சிக்கித் தவித்த மக்களை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணி துவங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று படகுகள் இயங்குவதைப் பார்த்தேன். இதுபோன்ற சமயத்தில் தமிழக அரசின் பணி சிறப்பானது. அயராது உழைக்கும் அனைத்து துறையினருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மிரள வைத்த மிக்ஜாம் புயல்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர்!