சென்னை:நடிகர் விக்ரமின் மாறுபட்ட தோற்றத்துடனும், அனைவரது ஆர்வத்தையும் தூண்டும் வகையிலும் இயக்கப்பட்டுள்ள தங்கலான் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. தமிழ் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக பல படங்களை தயாரித்து தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
இவரது இயக்கத்தில், நடிகர் விக்ரமின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் தங்கலான். தான் நடித்த படங்களில் பல வித்தியாசமான தோற்றங்கள் மூலம் ரசிகர்களது கவனத்தைப் பெற்ற விக்ரம், இந்த படத்திலும் தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளார்.
கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ள தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப்பில் நடைபெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர் விக்ரமின் தங்கலான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!