சென்னை:நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகத் திகழ்பவர். அவரது படங்கள் கோடிகளில் வியாபாரம் ஆகக் கூடியவை. எனவே இவரை வைத்து படம் தயாரிக்கத் தயாரிப்பாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் விஜய் சினிமா மட்டுமின்றி தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இவரது மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சமீப காலமாக விஜய் அரசியலில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதன் காரணமாகத் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். அம்பேத்கர் சிலைக்கு மக்கள் இயக்கத்தினர் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலும் திரட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய இடங்கள், அரசியல் கட்சிகள், அரசியல் ஆளுமைகள் குறித்தும் கேட்கப்பட்டு வருகிறது.