சென்னை:சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் நேற்று (மார்ச் 30) வெளியானது. இதனால், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல திரையரங்குகளில் மக்கள் குடும்பமாக வந்தும் படத்தைக் கண்டு கழித்தனர். ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் படம் பார்க்கச் சென்ற நிலையில், டிக்கெட் இருந்தும் அவர்களை டிக்கெட் பரிசோதனை செய்யக்கூடிய திரையரங்க ஊழியர் உள்ளே அனுமதிக்காதது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதனைத் தொடர்ந்து, பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர். மேலும், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் குறித்து கடுமையான தனது கண்டத்தைத் தெரிவித்தார். பின்னர், ரோகிணி திரையரங்கு தரப்பில், ‘பத்து தல’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை, எனவே தான் மறுக்கப்பட்டது என்றும் பின், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், ஜி.வி.பிரகாஷ் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பலரும் தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவி செய்து வந்தனர்.