தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அவரது கருத்துகள் என்னை புண்படுத்தின' - நடிகர் விஜய்

vijay  actor vijay  vijay car case  individual judge offend on vijay  நடிகர் விஜய்  விஜய்  சொகுசு கார் வழக்கு
actor vijay

By

Published : Oct 25, 2021, 1:05 PM IST

Updated : Oct 25, 2021, 5:28 PM IST

12:53 October 25

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை புண்படுத்தியுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளுபடி செய்தார். 

மேல்முறையீடு

மேலும் நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வில் இன்று (அக்டோபர் 25) விசாரணைக்கு வந்தது. 

அப்போது நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, நிலுவை வரித்தொகையான 32 லட்சத்த் 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்தியாதாகவும், அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். எனவே நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

நீதிபதி கருத்து

நுழைவு வரி வசூலிப்பதா, வேண்டாமா என்பது 20 ஆண்டுகளாக இருந்த பிரச்சினை என்றும், சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், ஒன்றிய அரசு தான் சட்டம் இயற்ற முடியும் என்றும், இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை எனக் கூறியிருப்பதாகவும், அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார். 

நடிகர்கள் நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றது என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார். கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் வாதிட்டார்.

தேவையற்ற கருத்துகள் 

சினிமாத் துறை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், வரி ஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை என்றும், மற்றவர்களைப் போல தானும் வழக்கு தொடர்ந்ததாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு என்றும், நீதிபதியின் கருத்துக்கள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகள் கடும் கருத்துக்களை தெரிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், சில வழக்குகளில் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துபவரை ஆய்வு செய்யலாம் என்றும், அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம் என்றும், ஆனால் இந்த வழக்கில் தேவையில்லை என வாதிடப்பட்டது. வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒத்திவைப்பு 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வு, குறுப்பிட்ட கருத்துக்களை நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர். 

தன் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்று, நடிகர்கள் என பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதுடன், குற்றவாளி போல காட்டியுள்ளதாகவும் விஜய் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

ஒரு லட்சம் அபராதம் செலுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், இரண்டு கோடி செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்மறை கருத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் ரஜினிகாந்த்! 

Last Updated : Oct 25, 2021, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details