அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. நடிகர் விஜய் இந்த கட்சியை தொடங்கியதாக நேற்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. ஆனால், அந்தக் கட்சியை பதிவு செய்தது, தான், தான் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவித்தார். அடுத்த திருப்பமாக, அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைந்து கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து தந்தை மற்றும் மகன் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லையா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்விகள் எழுப்பியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில்தான் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வேண்டா வெறுப்பாகத்தான் அதில் பங்கேற்றார் என்பது அவர் அளித்த பதில்கள் மூலம் தெரிந்தது. பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்தார்.
எனக்கு ஊடகங்கள் வாயிலாகத் தான், எனது தந்தை புதிதாக கட்சி தொடங்கியிருந்தது தெரியவந்தது என்று விஜய் தெரிவித்துள்ளாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, 1993 ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக தொடங்கிய ஒரு அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியது. அந்த மக்கள் இயக்கத்தின் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்சியைப் பதிவு செய்துள்ளேன். இது அவரது பெயரில் புதிதாக தொடங்கப்பட்டது கிடையாது. ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கட்சியை பதிவு செய்துள்ளோம் என்றார்.