சென்னை : நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகராக உள்ளார் நடிகர் விஜய். கடந்த 1992ஆம் ஆண்டு அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதன்பிறகு தனது தந்தையின் இயக்கத்தில் சில படங்களில் நடித்த விஜய்க்கு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதனை அடுத்து மெல்ல மெல்ல முன்னணி நடிகராக உயர்ந்தார். மென்மையான காதல் படங்களில் நடித்து வந்த விஜய்க்கு ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை திரைப்படம் ஆக்சன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது.
அதன் பிறகு ஏறுமுகம் தான். தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக மாறினர். தற்போது லியோ வரையில் அவர்களின் அன்பு தொடர்கிறது. மேலும் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார் நடிகர் விஜய்.
அடுத்தகட்டமாக அரசியலில் நுழையும் திட்டத்தில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு திட்டங்களைச் செய்து வருகிறார். சமீபத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து உற்சாகப்படுத்தினார்.
இந்த நிலையில் விஜய் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்து டிசம்பர் 4ஆம் தேதியுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாலவாக்கம் விஷ்ராந்தி ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களை அழைத்துச் சென்று ECR விஜய் பார்க் திரையரங்கில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தைக் காண வைத்து அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கினர்.
இதுமட்டும் இல்லாது, பாதுகாப்பாக வாகனங்கள் ஏற்பாடு செய்து மீண்டும் ஆசிரமத்தில் கொண்டுபோய் சேர்த்தனர். இந்த ஏற்பாடுகளைச் சென்னை புறநகர் மாவட்ட தளபதி மக்கள் இயக்க தலைமை நிர்வாகிகள் மற்றும் சென்னை மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும் விஜய்யின் 31வது ஆண்டு திரையுலக பயணத்தைக் கொண்டாடும் வகையில் சென்னை ரோகிணி திரையரங்கில் விஜய் நடித்த கத்தி மற்றும் துப்பாக்கி திரைப்படங்கள் இன்று (டிச. 3) மற்றும் நாளை (டிச. 4) திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று விழுப்புரம் மாவட்ட வானூர் ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு ரெயின் கோட், புடவை மற்றும் 5 கிலோ அரிசி பைகளும், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா போன்ற உபகரணங்கள், பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
இதையும் படிங்க:மங்கை வள்ளி கும்மி குழுவின் 100வது அரங்கேற்றம் - கண்கவர் கழுகு பார்வை காட்சி!