சென்னை: பசுமை சைதை திட்டத்தின் கீழ் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதாப்பேட்டை தொகுதியில் 5 ஆயிரம் மரங்களை நடும் நிகழ்வு சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரத்தினை நட்டு இந்நிகழ்வைத் துவக்கி வைத்தனர்.
தொடக்க நிகழ்வாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் வடிவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர், திமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் என மொத்தம் 43 பேர் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
அதை அடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “வடக்கு மாவட்ட சேதங்களின் வடுக்களே மாறாத நிலை தென் மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு உருவாகி உள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் இவ்வளவு மரங்கள் நடுவோம் என்றும், 23.7% ஆக உள்ள பசுமை பரப்பை 25% ஆக உயர்த்துவோம் என்றும் கூறினார். சொன்னதோடு மட்டுமல்லாமல் 2.80 கோடி மரங்களை நடும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு பேசும் போது, “இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவது மகிழ்ச்சி. மரத்தை நேசிக்காமல் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். தமிழ்நாடு அரசு பல சோதனைகளைச் சந்திக்கிறது. சென்னையில் புயலை அரசியலாக்கிவிட்டார்கள். ஆனால் தென்மாவட்ட மழையில் அவ்வாறு செய்ய இயலவில்லை. இயக்குநர் மாரி செல்வராஜ் ஏன் அங்குச் செல்கிறார் என்கிறார்கள். அது அவருடைய ஊர் அங்குள்ள பள்ளம் மேடு அவருக்குத் தான் தெரியும்.
உதயநிதி ஸ்டாலின் அங்குச் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார். அவர் தான் அதைச் செய்ய வேண்டும். உதயநிதிக்கு என்ன தெரியும் என்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கும் போது வேலை செய்கிறார்கள். அரசு சிறப்பாக பணிகளைச் செய்கிறது. இயற்கை தான் கடவுள், கடவுள் தான் இயற்கை ஒருமித்த கருத்தோடு மரங்களை நடுங்கள் மரமும் மாதாவும் ஒன்று என எண்ணவேண்டும். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பொன்னாடையை அளிக்காமல் மரக்கன்றுகளை வழங்குங்கள்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, “சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தலைமையில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நான் தொடங்கி வைத்தது, மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சியோடும் இருக்கின்றது. தமிழக அரசு மிக அழகாகச் சிறப்பாக நிவாரண பணிகளைச் செய்து வருகின்றனர். படிப்படியாக யாருக்கும் எந்த கெடுதலும் இல்லாமல் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மக்களின் வேதனையை முதலமைச்சர் உணர்ந்துள்ளார். ஆகையால், எல்லா அமைச்சர்களையும் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் எல்லாம் அனைவரும் இறங்கி நிவாரண பணிகளைச் செய்து வருகின்றனர். இன்னும் இது போன்ற இயற்கை பேரிடர்கள் வரும் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
ஆகையால் மக்கள் நாம் அனைவரும் விழிப்போடு இருந்து அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கையால் இந்த முறை பெருமளவில் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. உலகமே நம்மைப் பாராட்டினாலும் நம்மைத் திட்டுவதற்கு நான்கு பேர் இருப்பார்கள். அது போலத்தான் இதுவும். திட்டுபவர்கள் திட்டிக் கொண்டே இருக்கட்டும் என அரசாங்கம் தன் கடமையைச் சிறப்பாகச் செய்யும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தென்மாவட்ட வெள்ளம்.. மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரிக்கை!