மாரி செல்வராஜ் நகைச்சுவை படங்களையும் இயக்க வேண்டும் - நடிகர் வடிவேலு சென்னை:மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த ஜூன் 29ம் தேதி வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. இந்த படம் வெளியாகி பல்வேறு விவாதங்களை எழுப்பியதோடு, வசூலிலும் வெற்றி பெற்றது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமூக நீதி என்ற போர்வையில் சாதி வேறுபாட்டை பேசும் படைப்பாக இத்திரைப்படம் உருவாகியிருந்தது. திரையரங்குகளில் வெற்றிபெற்ற இப்படம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக இந்த படத்தில் வாழ்ந்திருந்தார். ஃபகத் ஃபாசில் 'ரத்னவேலு' கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் மக்களுக்காக போராடும் இளைஞர்களின் வேடத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுகளை பெற்றது. இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து, இந்திய சினிமா வரலாற்றில் ஓடிடி டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்தது “மாமன்னன்” திரைப்படம். அது மட்டுமன்றி, நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 ட்ரெண்டிங்கில் உள்ள ஒரே இந்தியப்படமும், தமிழ் படமும் ‘மாமன்னன்’ படம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை திரையரங்குகளில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இப்படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடி வரும்நிலையில் இன்று (ஆக.17) 50வது நாட்களை கடந்துள்ளது. இதன் 50வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ், ஏ.ஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் நடிகர் வடிவேலு பேசிய போது, “இந்த படத்தில் எனக்கு ஆறு காட்சிகள் பிடித்திருந்தது எனவும், படம்பார்த்த பின் இந்த காட்சிகள் என்னை தூங்க விடவில்லை எனவும், மலை உச்சியில் நின்று அழுகும் காட்சிகள் நானே ரசித்தேன் என்றார். இடைவேளை காட்சியில் இருவரும் பைக்கில் செல்லும் போது, அந்த பைக்கும் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டது. உதயநிதி இறுக்கமான முகத்துடன் உள்வாங்கி நடித்திருப்பார். அந்த காட்சியையும் ரசித்தேன் என்றார். அதுமட்டுமின்றி மனைவியின் காலை பிடித்துக்கொண்டு பேசும் காட்சியும் பிடித்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அந்த காட்சியை குறிப்பிட்டு என்னிடம் பேசினர். தேர்தலில் வெற்றி பெற்றப்பின் உதயநிதியிடம் பேசும் காட்சியும் பிடித்ததாக மகிழ்ச்சி நிறைந்த பூரிப்புடன் பேசினார்.
மேலும் பேசிய வடிவேலு, மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் மேலும் வளர வேண்டும் எனவும், ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன், வலி இருந்தது. இதுபோன்ற நிறைய படங்களை எடுக்க வேண்டும் எனவும், மாரி செல்வராஜ் நகைச்சுவை படங்களும் இயக்க வேண்டும் என்றார். இதையே எடுத்து உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இப்படம் எனக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தந்தது. இதுபோன்ற வெற்றி எனக்கு கிடைத்தது இல்லை. ரெட் ஜெயன்ட் மூவிஸ் உடன் இரண்டு படம்தான் நடித்துள்ளேன். இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என்று பேசினார். பின்னர் மேடையில் குழந்தைகளுடன் பாட்டுப்பாடி மகிழ்ந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'மாமன்னன் எனக்குள் 30 ஆண்டுகள் இருந்த ஆதங்கம்' - ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!