நடிகை சுஹாசினி அளித்த பேட்டி சென்னை:கடந்த 1973ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர், நடிகர் சரத்பாபு (72). கமல்ஹாசனின் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் நடித்த சரத்பாபு, இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான ‘முள்ளும் மலரும்’ படத்தில் நடித்த பின்பு, தமிழ் சினிமா ரசிகர்களை கவனிக்க வைத்தார்.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..’ என்ற பாடல் தற்போது வரை சினிமா ரசிகர்கள் பிளே லிஸ்ட்டில் உள்ளது. அது மட்டுமல்லாமல், அண்ணாமலை, முத்து ஆகிய மெகா ஹிட் படங்களிலும் ரஜினிகாந்த் - சரத்பாபு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும், விஜய்யின் பேராசிரியராக நடித்த ‘புதிய கீதை’ படத்தில் சரத்பாபுவின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சரத்பாபு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சரத்பாபு, நேற்று (மே 22) மதியம் 1.22 மணிக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
அவருக்கு சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு, இறுதியாக வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த சரத்பாபுவின் உடல் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சேம்பரில் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், அவரது உடல் ஹைதராபாத்தில் இருந்து இன்று (மே 23) காலை சென்னை கொண்டு வரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சரத்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சுஹாசினி மணிரத்னம், “மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் நடிகர் சரத்பாபுவை காப்பாற்ற முடியவில்லை. சரத்பாபுவிற்கு நண்பராக இல்லாதவர்களே கிடையாது.
சரத்பாபுவிற்கு எந்த விதமான கெட்டப் பழக்கமும் இல்லை. காலில் முதலில் ஒரு வீக்கம் இருந்தது. அதன் பின்னர் உடல் எடை குறைந்தது. இது போன்று நடிகர்களுக்கு மட்டுமின்றி, யாருக்கு இருந்தாலும் அவர்கள் உடல் நிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அவருடைய இழப்பு மிகப் பெரிய இழப்பு. இன்று மதியம் அவரது பூத உடல் கிண்டியில் எரியூட்டப்படும்” எனக் கூறினார்.
மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நண்பர் சரத் பாபு அவர்களுடைய சிரிக்காத முகத்தை இன்று தான் நான் பார்க்கிறேன். நான் அவரை சந்திக்கும் போதெல்லாம் அவருடைய சந்தோஷம் கலந்த முகம், செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற பாட்டு இவருடைய புன்னகையினைப் பார்த்து தான் எடுத்து இருப்பார்களோ என்று தோன்றும். சந்தோஷமாக இருக்கிற மனிதர்.
மரண செய்தி இப்போது தான் வந்திருக்கிறது. சில யூடியூப் சேனல் மூலமாக போன மாதமே அவர் இறந்ததாக செய்திகள் வெளியானது மிகவும் வருந்தத்தக்கது. உடனே அவர் வீட்டில் இருந்து அதற்கு மறுப்புச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எதிர்காலத்தில் மிக சென்சிடிவ் ஆன நிகழ்வுகளை போடுவதற்கு முன்னர் வெறும் தொலைக்காட்சியை நடத்த வேண்டும் என்பதற்காக மட்டும் இல்லாமல் குடும்பத்தை பாதிக்கும் என்பதையும் யோசித்து இது போன்ற செய்திகளைத் தவிர்க்க வேண்டும். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” எனப் பேசினார்.
இந்த நிலையில், மறைந்த சரத்பாபுவுக்கு தென்னிந்தியத் திரையுலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது. குறிப்பாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
Sarath babu: மறைந்த பிரபல நடிகர் சரத்பாபு உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது; பிரபலங்கள் நேரில் அஞ்சலி இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் கிண்டி இண்டஸ்ரியல் எஸ்டேட்டில் உள்ள இடுகாட்டில் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட்டது. சரத்பாபுவின் உடலுக்கு அவரது சகோதரர் வசந்த் இறுதிச் சடங்குகளை செய்தார்.
இதையும் படிங்க:ரஜினி, கமலை தாண்டி திரையில் ஜொலித்த ஹீரோ சரத்பாபு