சென்னை:நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்கு நடிகை த்ரிஷா உட்பட பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சிக்கிறது என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மன்சூர் அலிகான், பாலியல் ரீதியாக விரும்பத்தகாத வகையில் நடிகை த்ரிஷா குறித்து பேசியிருந்தார். இதற்கு நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட பலர் கண்டணம் தெரிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷாவை இழிவுப் படுத்தும் வகையில் பேசியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மன்சூர் அலிகானை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.
அதில்,"மன்சூர் அலிகான் போன்ற மூத்த நடிகர் தனது பெண் சக ஊழியர்களைப் பற்றி இப்படி இழிவான கருத்துக்களை கூறியது அதிர்ச்சியளிக்கிறது. மன்சூர் அலிகான் சக நடிகைகள் குறித்து கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த இழிவான செயலால், மன்சூர் தனது தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கு தற்காலிக தடை விதிக்க நடிகர் சங்கம் பரிசீலித்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை" - ஈவிகேஎஸ் இளங்கோவன்
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது த்ரிஷா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்கிறது. சங்கத்தில் இருப்பவர்கள் ஒரு செய்தி வந்தால் அதை கூர்ந்து கவனிக்காமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகின்றனர். நான் மன்னிப்பு கேட்கும் நபர் கிடையாது. என்னிடம் கேட்காமல் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் சங்கத்தினர் என்னிடம் கேட்டிருக்க வேண்டும். அவர்கள் செய்தது தவறு. ஆய்வு செய்துதான் அறிக்கைகள் வெளியிட வேண்டும். நான் அனைத்து நடிகைகளையும் இழிவாக பேசுபவன் இல்லை. அனைத்தும் தெரிந்தும் நான் அனுசரித்து செல்கிறேன். எஸ்.வி.சேகர் பெண்கள் வேலை செய்ய வேண்டும் என்றால், பாலியல் ரீதியாக செயல்கள் செய்ய வேண்டும் என கூறியதற்கு, அவருக்கு இந்த ஆணையம் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சங்கத்தினர் அளித்த செய்தியாளர் அறிக்கையை 4 மணி நேரத்தில் வாபஸ் வாங்க வேண்டும். மேலும், எனக்கு பதில் அளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும். நான் அதற்கு பதில் அளிக்கிறேன். தேவையில்லாத சர்ச்சைகளுக்கு ஆதரவாக பேசுவது போன்று நான் விளையாட்டாக பேசினேன். த்ரிஷாவை நான் பாராட்டித் தான் பேசியுள்ளேன். நான் யாரையும் இழிவாக பேசவில்லை. நடிகர் சங்கத்தினர் என்னை அழைத்து எதுவும் விசாரிக்க வில்லை. என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சிக்கிறது" என்று ஆவேசமாக கூறினார்.
இதையும் படிங்க:“உதய் மாமா…ஸ்டாலின் தாத்தா வாழ்த்து கூறினார்கள்” - தங்கம் வென்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மகள் நிலா ராஜா பேச்சு!