இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களுள் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.
புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன்
1958-ல் மனமுள்ள மறுதாரத்தில் அறிமுகமாகி 2008-ல் தசாவதாரம் வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப்பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதோ, விருதுகள் அங்கீகாரங்களுக்காக ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும் போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.
1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் நம்மவர் திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலை வாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ்.