சென்னை:நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் முக்கிய நடிகராக பார்க்கப்படுகிறார். தனது அசுரத்தனமான நடிப்பு மூலம் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். சாதாரண இடத்திலிருந்து தனது கடின உழைப்பு காரணமாக இந்த இடத்தை அடைந்துள்ளார்.
இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்து வெளிவர உள்ளது. இதுமட்டுமின்றி தனது 50வது படத்தைத் தானே இயக்கி நடித்து வருகிறார். இதுதவிர இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ், நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் கடந்தாண்டு பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தனர். இந்த செய்தி கேட்டு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் எடுத்த முயற்சியும் வீண் போனது. தற்போது, இருவரும் பிரிந்து அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து இருப்பதால் மகன்கள் இருவரும் கொஞ்ச நாள் தனுஷ் உடனும், கொஞ்ச நாள் தாத்தா ரஜினி வீட்டிலும் தங்கி வருகின்றனர். இந்த நிலையில், தனுஷ் போயஸ் கார்டனில் ரஜினி வீட்டின் அருகே ரூ.150 கோடி மதிப்பில் புதிய வீட்டைக் கட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார்.