சென்னை:சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரித்து இயக்குநர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்துள்ள படம் ராயர் பரம்பரை. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 30) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கிருஷ்ணா, ஆனந்த் ராஜ், லொள்ளு சபா ஜீவா, தயாரிப்பாளர் கே. ராஜன், நடிகை கிருத்திகா, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குநர் ராம்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் நடிகர் கிருஷ்ணா பேசுகையில், ''ரொம்ப ஸாரி. என்னால் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. 1.30 மணிநேரமாக காரில் தான் இருந்தேன். கரோனா முடிந்த பிறகு நான் நடிக்க ஒப்புக் கொண்ட படம் இது தான். நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். இது எனக்கு வசதியில்லாத ஜார்னர். அதனால், இயக்குநரை நம்பி தான் இந்தப் படத்தில் நடித்தேன்.
தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் எல்லாரும் வாழ முடியும். நான் சில படங்களில் சம்பளம் இல்லாமலே நடித்திருக்கிறேன். மேலும் எனக்குத் திரைத்துறையில் நம்பிக்கை கொடுத்த முதல் மனிதர் லொள்ளு சபா ஜீவா தான்'' என்று கூறினார்.
பின் நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆனந்த் ராஜ்,மனோபாலா, ஆர். என். மனோகர் இருவருக்கும் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்திப் பேசினார். ''இப்படியொரு கூட்டு முயற்சியைத் தான் நாங்கள் எதிர்பார்த்தோம். அனைத்து தயாரிப்பாளரையும் இனி நான் முதலாளி என்றும் அழைக்க இருக்கிறேன். நாங்கள் கற்றுக்கொடுக்கிற இடத்தில் இருக்கிறோம்.
இப்போதிருக்கும் இளைஞர்கள் கற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். நாம் மாற வேண்டுமா, கற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்டதற்கு, ஆம் நாமும் கொஞ்சம் மாற வேண்டும் என்று சொன்னேன். சினிமா கொஞ்சம் மாறி இருக்கிறது. ஹீரோயினை சகோதரி என்று சொன்னவர், இந்த இயக்குநர் தான். இந்த படம், ராஜன் சொன்ன மாதிரி, சிறிய படம் அல்ல.
இந்தப் படத்தில் நான் ஒன்றைத் தான் விரும்பி கேட்டேன். இதில் என் தாயாராக நடிக்கப் போகிறவர் யார் என்று?. அதைத் தெரிந்து கொள்ள ஒரு சிறிய விருப்பம். நான் கே.ஆர். விஜயாம்மா எனது தாயாராக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். முதுபெரும் நடிகையான அவரை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது எனது விருப்பம். அது என் தனிப்பட்ட விருப்பம். அதை எல்லோரும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நம்மை விட்டு விலகி இருக்கிற அல்லது ஒதுங்கி இருக்கிற, சில நடிகர்களைக் கண்டுபிடித்து அவர்கள் விரும்பினால், நிச்சயம் அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அதில் ஒன்று தான் கே. ஆர். விஜயா என் தாயாராக இருக்க வேண்டும் என்பது. நிறைய படங்களில் கே. ஆர். விஜயாம்மாவோடு இணைந்து நடித்திருக்கிறேன்.
ஆனாலும் அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதைத் தொடர்ந்து அதை நிறைவேற்றித் தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம், சாதி ரீதியாக கலக்குகிற படம் தான். ஆனால் ஜாலியாக மதத்தை, இனத்தைச் சொல்லுகின்ற படமாக இருக்கும். படத்தைப் பார்த்தால் கொஞ்சம் குழப்பமாகி விடும். யாரையும், எந்த மதத்தையும் காயப்படுத்தாமல் இன ரீதியாக, ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதனால் தான், படத்தின் பெயரே ராயர் பரம்பரை என வைத்துள்ளோம். இதில் அந்த ராயரே நான் தான்.
நான் கதாநாயகனாக நடிக்கும்போது நிறைய விஷயங்களைத் தவற விட்டுவிட்டேன். ஆனால் இனி நல்ல மனிதர்களை தவற விட மாட்டோம் என்கிற உறுதியை இங்கு நாம் எடுத்துக்கொள்வோம்” என்றும் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்த் ராஜிடம் மாமன்னன் படம் குறித்து கேட்டபோது, 'பல காலங்களில் பல படங்கள் வந்திருக்கிறது. கே. பாலச்சந்தர் காலத்தில் இருந்தே நிறைய படங்கள் பார்த்திருக்கோம்.
நிறைய இயக்குநர்கள் இதைப் படங்களில் வைத்திருக்கிறார்கள். முதல் மரியாதை படத்தில் கூட ஒரு சீன் இருக்கும். இது பல ஆண்டுகளாக இருக்கிற ஒரு விஷயம் தான். அதே மாதிரி, வேதம் புதிது படத்தில் பாலுத் தேவர் என்பது நீங்கள் வைத்தது. பாலுத் தேவர் என்பது பட்டமா என்று கேட்டார்கள். அது யாரையும் காயப்படுத்தாமல் இருந்தது.