சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்து மீண்ட அவர், டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.
அந்த பொதுக்குழுவில் தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவால் செவ்வாய்கிழமை (டிச.26) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (டிச.28) காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். அதன் தொடர்ச்சியாக, சென்னை தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில், இன்று (டிச.29) காலை முதல் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்டது.
மேலும், அவரது இறுதி ஊர்வலம், தீவுத்திடலில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் அடைந்து, இறுதிச் சடங்கானது நடைபெற்று, தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்டுகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் அஜர்பைஜானில் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்கே சுதீஷ் ஆகியோரை வாட்ஸ் அப் மூலமாகத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"நடிப்பின் இலக்கணம் நண்பர் விஜயகாந்த்" - நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு கண்ணீர் சிந்திய ரஜினிகாந்த்!