சென்னை: ஊதிய உயர்வு, அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று (ஜனவரி 9) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "இன்று 95 சதவீத பேருந்துகள் இயங்குகிறது. குறிப்பாக அரசு விரைவு பேருந்து (SETC) 100 சதவீதம் இயங்குகிறது. கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இயங்குகின்றன. எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு செய்ய இருக்கின்றவர்கள் என அனைவரும் அச்சமின்றி சொந்த ஊருக்குச் செல்ல அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் செயல்படும்.
அதே போல், சென்னை மாநகர பேருந்துகள் காலையில் 96 சதவீதம் இயங்கியது, படிப்படியாக தற்போது 100 சதவீத பேருந்துகளும் இயங்குகின்றன. ஆகையால், மக்களுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி போக்குவரத்துக் கழகம் சிறப்பாகச் செயல்படும்" என்றார்.