சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆறுமுகசாமியின் அறிக்கை குறித்து பேசிய அவர்,
ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு கோப்புகள் அனுப்பப்படும். சுகாதாரத்துறை செயலாளர் சட்ட நிபுணரிடம் ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியானவுடன் தலைமைச் செயலாளர், ஆணையத்தின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார். சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்களுக்கு அது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரை குறித்து யார் மூலம் விசாரணை நடத்த வேண்டும். எப்படியான விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக முதலமைச்சர் இன்று பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குழு அமைக்க வேண்டுமா என இனிதான் முடிவு செய்யப்படும். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை ஓ. பன்னீர் செல்வம் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேரின் சாவுக்கும் காரணமாக எடப்பாடி பழனிசாமியும் சேர்க்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் கூறியுள்ளனர். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமிழைத்த நபர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீத தமிழர்களின் மனதிலும் ஆணையத்தின் அறிக்கை போய் சேர்ந்துள்ளது” என்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி முன்னதாக அவர் பேசுகையில், “ஸ்டாலின் முதலமைச்சரானதால் கேள்வி நேரம் உட்பட அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. பழனிசாமி இன்று பேரவைத் தலைவரை குறை கூறியது அதிசயமாக உள்ளது. 13 பேர் சுடப்பட்டது தனக்கு தெரியாது, தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார். அருணா ஜெகதீசன் அறிக்கையில் ஒவ்வொரு நிமிடமும் அனைத்து சம்பவமும் காவல்துறை, ஆட்சி நிர்வாகத்தினர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்டம் ஒழுங்கு கவனிக்கப்படாமல் இருந்தது. தீவரமாக கவனித்திருந்தால் ஆரம்பத்திலேயே சமாளித்திருக்கலாம் என்று ஆணையம் கூறியுள்ளது. முதலமைச்சர் அலட்சியம், அசட்டையாக இருந்ததற்கு இந்த சம்பவம் உன்னத உதாரணமாக இருந்துள்ளது.
இதையும் படிங்க:தடையை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் சிறை : மசோதா நிறைவேறியது !