தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தெரு விளக்கு வெளிச்சத்துல முன்னேறி வருவோம்' - நரிக்குறவர் மாணவியின் சாதனை - narikuravar student in madurai

மதுரை: "தெரு விளக்கு வெளிச்சத்துல படிச்சி 12ஆம் வகுப்பு தேர்வுல 600க்கு 500 மார்க் வாங்கியிருக்கிறேன், என்னை மாதிரி நிறைய பிள்ளைங்க இப்படி படிக்கிறாங்க, அவங்களுக்கு மின்சார வசதி கிடைச்ச இன்னும் அதிகமா மார்க் வாங்குவோம் என்ற நரிக்குறவர் இன மாணவியின் வெளிச்சக் குரல்.

narikuravar student in madurai
narikuravar student in madurai

By

Published : Jul 21, 2020, 6:39 AM IST

வறுமையில் வாழ்ந்தாலும் வாய்த்த மதி விதியை மாற்றும் என்பதற்கு பல ஏழை மாணவ, மாணவிகளின் வாழ்க்கை உதாரணமாகி வருகிறது. 3 லட்சத்து 84 ஆயிரத்து 403 கி.மீ. தொலைவிலுள்ள நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் நகரத்திலிருந்து 5 முதல் 50 கி.மீ. வரை தொலைவிலிருக்கும் பல கிராமங்களுக்கு மின்சாரம் கால் பதிக்கவில்லை.

நரிக்குறவர் மாணவியின் சாதனை

இருளில் மூழ்குகிறது பல வெளிச்சக் கனவுகள். என்ன செய்வது! திறமை இருளிலும் மின்னுகிறதே!. கிடைக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறி வருகிறார்கள் பல சாதனையாளர்கள். அப்படி வந்த மாணவிதான் தேவயானி.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள ஜேஜே நகரில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் (நரிக்குறவர்கள்) இனத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களில் தேவயானியின் குடும்பமும் ஒன்று. அப்பா கணேசன், அம்மா லட்சுமி இருவரும் குறி சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள்.

மாணவி பேசுகையில்

ஜே.ஜே. நகரில் தெருவிளக்கை மட்டுமே நம்பி 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குறி சொல்லி கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களால் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து வீடுகளுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஆனால் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க தவறுவதில்லை. அப்படி தேவயானியின் பெற்றோர் அவரை திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்துள்ளனர். மாணவியும் வறுமையை நினைத்து வருந்தாமல் நன்றாகப் படித்துவந்தார். வீட்டிற்கு வந்ததும் மாணவி தெருவிளக்கு வெளிச்சத்தில்தான் படிப்பார்.

மாணவியின் தந்தை பேசுகையில்

தெருவிளக்கில் படித்தாலும் படிக்கும் மாணவி ஆயிற்றே, பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் 600க்கு 500 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது பகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மாணவி தேவயானி. இதுகுறித்து தேவையானி, "எங்கள் பகுதியில் வாழும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே தெருவிளக்கை நம்பியே படித்து வருகிறோம்.

நான் மட்டுமல்ல என்னைப்போல் நன்றாக படிக்கக்கூடிய நிறைய மாணவ, மாணவிகள் இங்குள்ளனர். எங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுத்தால் இதைவிட நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வருவோம். அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்" எனத் தெரிவித்தார். அதையடுத்து மாணவியின் தந்தை கணேசன் பேசுகையில், "எனது மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

எனது மகள் படித்து நல்ல அலுவலராக வந்தால் எங்கள் சமுதாயத்திற்கு மதிப்பு கிடைக்கும். அவரை மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு அரசு உதவ முன் வர வேண்டும்" எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பேசிய காட்டு நாயக்கர் சமுதாயத்தின் தலைவர் முருகன், "திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள ஜே.ஜே.நகர் குடியிருப்பில் நாங்கள் 50 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

எங்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்திற்கு மின்சார வசதி தேவை. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதனைக் கருத்தில் கொண்டு மின்சார வசதி செய்து கொடுத்தால் எங்கள் குழந்தைகள் படித்து நல்ல நிலைமைக்கு வருவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சாதனை மாணவி ஸ்ரீதேவிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details