சென்னை: தஞ்சாவூரில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று (பிப்.14) ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஹரிகிருஷ்ணன் தலைமையில் மாணவர்கள் உட்பட 35 பேர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது காவல் துறையின் எச்சரிக்கையை மீறி மாணவர்கள் பேரிகார்டை தள்ளிவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட அனைவரும் ஓடியுள்ளனர்.
அப்போது, அனைவரையும் காவல் துறையினர் துரத்திச் சென்று கைது செய்து முத்தையா முதலி தெருவில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட 35 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்யும் நோக்கத்தோடு கூடுதல், சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிட முயற்சித்தல், அரசு பணியாளர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட அனைவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிறுத்தியபோது, மாஜிஸ்டிரேட் அனைவரும் மாணவர்கள் எனக் கூறியதற்குத், துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் அனைவரும் மாணவர் இல்லை என வாதிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாத சூழலில், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடுவது மாணவர்களே என்றாலும் குற்றம் என நீதிமன்றம் கூறியதால் வருகின்ற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்டிரேட் உத்தரவிட்டார். ஏபிவிபி அமைப்பு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ அமைப்பாகும்.
இதையும் படிங்க: 'யாரை மிரட்டுகிறீர்கள் - கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!'