சென்னை காவல் ஆணையர்அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது வழக்கறிஞருடன் புகார் ஒன்றை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”2003ஆம் ஆண்டு முதல் அண்ணா நகரிலுள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் கணக்காளராக நான் பணியாற்றி வந்தேன், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கஸ்தூரிராஜ் என்பவர் பல காலக்கட்டங்களில் எனக்கு செல்போனில்குறுஞ்செய்திமூலமாகவும், நேரிலும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
பல முறை இதை நான் எதிர்த்து கேட்டிருக்கிறேன். இந்நிலையில் கடந்த மாதம் தனக்கு கஸ்தூரிராஜ் பலவந்தமாக பாலியல் ரீதியாக எனக்கு தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக அவரது மனைவியின் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எனது கணவரிடம் தெரிவித்தேன்.
கடந்த ஏப்ரல் மாதம் எனது கணவர் இது குறித்து நிறுவன உரிமையாளரிடம் கேட்டபோது அவரை மிரட்டி அனுப்பியதுடன், இருவரையும் பணியிலிருந்து நீக்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் வங்கிக் கடன் தொடர்பாக நான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று விசாரித்தபோது, என் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதால், என்னுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக அண்ணாநகர் காவல்நிலையம் சென்று விசாரித்தபோது கஸ்தூரிராஜ் என் மீது ஏதோ புகார் கொடுத்திருபக்கிறார் என்பது தெரியவந்தது. மேலும் என்னை போன்று பல பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த கஸ்தூரிராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறேன்” என்றார்.
இது தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கஸ்தூரிராஜிடம் கேட்டபோது, ”புகார் தெரிவித்த பெண் என்னுடைய நிறுவனத்தில் கணக்காளராக இருந்தார். 2015ஆம் ஆண்டு முதல் போலி கணக்கு காண்பித்து தன்னுடைய நிறுவனத்திலிருந்து ரூ.72 லட்சம் கையாடல் செய்தது கடந்த ஏப்ரல் மாதம் தெரியவந்தது.
இதையடுத்து அவர் அலுவலகத்தைவிட்டு நீக்கப்பட்டார். இது தொடர்பாக அந்தப் பெண் மீது 10 நாட்களுக்கு முன்பு அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, அவரது வங்கி கணக்குகளை முடக்கினேன். இதனை திசை மாற்றவே என் மீது இதுபோன்ற புகாரை அந்த பெண் தெரிவித்துள்ளார். சட்டப்படி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்” என்றார்.
கட்டுமான நிறுவன மேலான் இயக்குநர்மீது பெண் பாலியல் புகார்