தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பலே கில்லாடி கைது.. சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி? - வன்கொடுமை

Chennai airport: கர்நாடக மாநில போலீசாரால் கடந்த 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி குவைத்தில் இருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Absconder wanted for 13 years arrested at Chennai airport
13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 9:44 PM IST

சென்னை:கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (42). இவர் மீது கர்நாடக மாநிலம் காவூர் தட்சிண கன்னடா காவல் நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு, சட்ட விரோதமாக கூடுவது, பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி படுகாயங்கள் ஏற்படுத்துவது, அரசு ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து பிரசாந்தை மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர், தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி (Look Out Circular) போடப்பட்டு இருந்தது.

பிரசாந்த் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த நிலையில், அவர் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு தட்சிண கன்னடா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், திருமணமான பெண்ணை தாக்கி வன்கொடுமையில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்கிலும் தலைமறைவாக இருந்த பிரசாந்தை, மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, மற்றொரு எல்.ஓ.சி போடப்பட்டது. பிரசாந்த் மீது கர்நாடக மாநிலம் மங்களூர் மாநகர காவல் ஆணையரகத்தில், இரண்டு எல்.ஓ.சி போடப்பட்டு இருந்த நிலையில், அவர் தொடர்ந்து வெளிநாடுகளில் தலைமறைவாக பதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று (அக்.17) திங்கட்கிழமை இரவு குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது, அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலமாக பரிசோதித்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அனுப்பிக்கொண்டு இருந்தனர்.

அந்த விமானத்தில், 13 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி பிரசாந்தும் வந்துள்ளார். அப்போது, பிரசாந்தின் பாஸ்போர்ட் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, இவர் கர்நாடக மாநிலம் மங்களூர் மாநகர காவல் ஆணையரால், கடந்த 13 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர்.

மேலும், இவர் மீது 2 எல்.ஓ.சி-கள் இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பிரசாந்தை வெளியில் விடாமல் மடக்கி வைத்த குடியுரிமை அதிகாரிகள், குடியுரிமை அலுவலக அறை ஒன்றில் அவரை அடைத்து வைத்தனர். அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது.

மேலும், 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான பிரசாந்த், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தகவல், மங்களூர் மாநகர காவல் ஆணையரகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கர்நாடக மாநில போலீசார், பிரசாந்தை கர்நாடகாவுக்கு கொண்டு செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க:தலைமைச் செயலகத்தில் 'லியோ' தரப்பு வழக்கறிஞர்களின் கார் விபத்து.. இருவருக்கு லேசான காயம்.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details