இளம் வயதில் முளைத்த சிறு ஆசை: விஜயராஜ் என்கிற விஜயகாந்த், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த 1952ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் தேதி அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறு வயது முதலே இவருக்கு சினிமா மீது இருந்த பிடிப்பு, படிப்பை சற்று தள்ளி வைத்தது.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த விஜயகாந்த், படிப்பு தனக்கான பாதை இல்லை என முடிவு செய்தார். அதேசமயம், சினிமா மீதும் நடிகர் எம்.ஜி.ஆர் படங்கள் மீதும் அவருக்கு அதிக அளவில் ஈர்ப்பு இருந்தது. படிப்பை நிறுத்திய பின்னர் அரிசி ஆலையில் பணியாற்றிய விஜயகாந்த், சினிமா மீது தனக்கிருந்த ஆர்வத்தால் சென்னையை நோக்கி பயணித்தார்.
சினிமாவிற்குள் நுழைந்த சிறு விதை: சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னையை நோக்கி பயணிப்பவர்கள் அனைவருமே பல அடிகளையும், அவமானங்களையும் சந்தித்த பின்தான் சினிமாவிற்குள் நுழைய முடியும். அதற்கு விஜயகாந்த் மட்டும் விதிவிலக்கல்ல. அப்படி, பல அவமானங்கள் மற்றும் புறக்கணிப்புகளுக்கு இடையே 1979ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ படத்தில் சிறு கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார் விஜயகாந்த். அங்குதான், விஜயராஜ் விஜயகாந்த் ஆக மாறினார்.
அதைத் தொடர்ந்து, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தூரத்து இடிமுழக்கம்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமை விழிகள்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்து, முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். ஆக்ஷன் படங்கள் என்றாலே அது விஜயகாந்த படம் தான் என மக்கள் மனதில் பதியும் அளவிற்கு, அடுக்கடுக்கான ஆக்ஷன் படங்களை கொடுத்து ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
கேப்டன் விஜயகாந்த்:விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும் அவரின் திறமையையும், சினிமா மீதான தீராத ஆர்வத்தையும் வெளிப்படுத்தியதோடு, மக்கள் மனதில் அவர் மீதான புதுவித பார்வையையும் உருவாக்கியது. அந்த வகையில், 1991ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக மாறியது ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்த்-ன் 100வது திரைப்படமாக அமைந்த இப்படம், இவருக்கு கேப்டன் என்ற மரியாதை கலந்த அன்பான அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
மக்கள் பணியில் விஜயகாந்த்:தனதுநடிப்பு மற்றும் திறமையால் வேகமாக வளர்ந்த விஜயகாந்த் 1999ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார். அதைத் தொடர்ந்து, இலவச மருத்துவமனை, பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி, பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, இலவச கணினிப் பயிற்சி மையங்கள், ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் மற்றும் திருமண மண்டபம் என சினிமா துறையில் இருந்துகொண்டே பல பொது சேவைகளையும் செய்து வந்தார்.