சென்னை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவியது. இதனைத் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்று சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வீடியோக்களை உள்நோக்கத்துடன் பகிர்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என தவறான வீடியோவை பதிவிட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுபம் சுக்லா மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சுபம் சுக்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு கிடைத்த தகவலின் உண்மை தன்மை ஆராயாமல் ட்விட்டரில் பகிர்ந்தேன். அதன் பிறகே அதன் விளைவுகள் தெரியவந்தது. தன்னுடைய செய்தி பகிர்வால் தனி நபரோ? குழுவோ? பாதிக்கப்பட்டிருந்தால் பகிரங்கமாக அதற்கு மன்னிப்பு கோருகிறேன். எந்த இரு பிரிவினருக்கும் இடையே பிரிச்னையை ஏற்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை.
தனது கருத்து தவறு என தெரிந்ததும் உடனடியாக ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. எவ்வித ஆதாரமும் இன்றி தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கபட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது தவறு என்றும், இனிவரும் காலங்களில் உண்மை தன்மை ஆராயாமல் சமூக வலைத்தளத்தில் இது போன்ற உண்மைக்கு புறம்பான தகவலை பகிர மாட்டேன் என உத்திரவாதம் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சுபம் சுக்லாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும், இரண்டு வாரங்கள் தினமும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுதிட வேண்டும் எனவும் கூறி உத்தரவிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போதுதான் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை உறுதிபடுத்தும் நோக்கத்தில் சில வட இந்திய செய்தி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக செய்திகளை வெளியிட்டது.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக விரோதிகள் தவறான செய்தியை பரப்புவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில்தான் சுபம் சுக்லா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மன்னிப்பு கோரியதை அடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி!