தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதிமுக நகரச் செயலாளர் தீனதாளன் தலைமையில், ஆவடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர், இன்னும் ஓரிரு வாரங்களில் பட்டாபிராம் தொழில்நுடப் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதலமைச்சர் நேரில் வரவுள்ளதாகத் தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் கட்சித் தொண்டர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டுவருவதால், இம்முறை கட்சிப் பணிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமெனவும் உறுதியளித்தார்.