சென்னை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த மாணவி (வயது 16) வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று (செப். 20) காலை வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மாணவி மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது, ஒரு தலையாக அந்த பெண்ணை காதல் செய்ததாக கூறப்படும் இளைஞர் மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை அழைத்துச் சென்று முகம், கை, தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அருகே இருந்தவர்கள் சாலையில் விழுந்து கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
பின், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு கல்லூரி மாணவியை போலீசார் அழைத்து சென்றனர். மேலும், சிகிச்சையில் இருக்கும் மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தான் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று (செப். 20) வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்து வந்த இளைஞர் அவரது ஒருதலைக் காதலை ஏற்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. அந்த காதலை மாணவி ஏற்க மறுத்த நிலையில் உடனே தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மாணவியின் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ள இளைஞரை காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஒருதலை காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி சரமாரியாக கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காதல் மனைவி கழுத்தறுத்து கொலை.. 2 நாட்களாக சடலத்துடன் இருந்த கணவர்! - நடந்தது என்ன?