சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தன. திமுக ஆட்சி அமைந்த உடன் அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வந்த எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நடப்பு கல்வி ஆண்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம் என பள்ளி கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது . இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியது.
எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு கற்பித்த தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால் அந்த மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகியது. இந்த நிலையில் 2,831 அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் தற்காலிகமாக நியமிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு மையத்திற்கு ஒரு தற்காலிக ஆசிரியர் நியமிக்க வேண்டும்.