சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் இன்று (அக்.16) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் ரூபாய் ஆயிரத்தி 763 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலை வாய்ப்பில் 4 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திராவிட மாடல் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும், நலன் பேணும் அரசாகவும் செயல்பட்டு வருகிறது. ஒரு மாற்றுத் திறனாளிகள் கூட பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலி பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்த 92 மையங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் சேவை புரியும் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்குவதற்காக 22 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களுக்கு தற்போது வழங்கும் கல்வி உரிமைத் தொகையை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறோம்.
உயர்கல்வி பயிலும் 1000 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கருவிகள் வழங்குவதற்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி ஆகியவற்றில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு முதன்மை தேர்வு எழுத தலா 50ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேசிய நிதி மேம்பாட்டு கழகத்தின் கீழ் கடன் பெறும் மாற்றுத்திறனாளிகள் உரிய சமயத்தில் கடனை திருப்பி செலுத்தும்போது, கடனுக்கான வட்டி தொகையை மாநில அரசு செலுத்துகிறது. தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி கடன் வழங்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டு 14 ஆயிரத்து 271 மாற்றுத்திறனாளிகளுக்கு 64 கோடி ரூபாய் செலவில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறுகுறு தொழில் மற்றும் பெட்டி கடைத் தொடங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஐந்து வகை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் 'மாதாந்திர உரிமைத் தொகை' ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.