சென்னை: தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஜூன் மாத கடைசி வாரத்தில் இருந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேசங்களில் கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீர் விலையேற்றத்தால் தக்காளிகளில் செய்யப்படும் உணவுகளுக்கு திண்டாட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. "தங்கம் கூட வாங்கிடலாம் போல, ஆனால் இந்த தக்காளியை வாங்க முடியல" என்றும் “தக்காளிக்கு இது குரு பார்வை காலம்” என்பன உள்ளிட்டப் பல்வேறு வாசகங்கள் அடங்கிய மீம்ஸ்கள் இணையத்தை தெறிக்கவிடுக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க தக்காளி விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க ஒரு சிலர் கூகுளில் தக்காளி இல்லாமல் சுவையான குழம்பு செய்வது எப்படி? தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி? என தேடத் தொடங்கியுள்ளனர். இதனால் 'தக்காளி இல்லாமல்' என்ற வார்த்தை கூகுளில் அதிக தேடுதல் இடத்தை பிடித்துள்ளது.
சமையலில் தக்காளி Must(மிக அவசியம்) என்று தான் பல உணவுகள் இருக்கின்றது. ஆனால் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியுமா? ஆம் முடியுமே!... உங்களுக்காக சில ரெசிப்பிகள் இதோ...
தக்காளி இல்லாத தக்காளி சட்னி:சிறிதளவு வெங்காயம் , பூண்டு, காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் சிறிதளவு புளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த கலவையை ஊற்றி தாளித்தால் தக்காளி இல்லாமலேயே சுவையான சட்னி ரெடி...
தக்காளி இல்லாத ரசம்: முதலில் புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின் நன்கு கரைத்து, வடி கட்டிக்கொள்ளவும். பின் மிளகு, பூண்டு, சீரகத்தை அரைத்து அதனை கரைத்த புளி கரைசலில் மஞ்சள், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்னர் தேவையான அளவு காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும். அடுத்ததாக கரைத்த புளி கரைசலை அதில் ஊற்றவும், பின் நுரை பொங்கி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தட்டுப்போட்டு மூடி விடுங்கள். அவ்வளவுதான் தக்காளியே இல்லாமல் சுவையான ரசம் தயார்.