சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, அக்கட்சியின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு பல பேர் முக்கிய தளபதிகளாக விளங்குகின்றனர். ஜெயலலிதா மறைந்தவுடனே இதற்கான விதையை எடப்பாடி பழனிசாமி விதைத்தாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா நிர்பந்தம் காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி இருந்த நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.
இந்த நிலையில் அதிமுக ஆட்சியை காப்பாற்ற நினைத்த சசிகலா முதலமைச்சராக யாரை தேர்வு செய்யலாம் என யோசனை செய்யும் போது, முதலமைச்சர் ஓட்டத்தில் 4வது இடத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தார். முதலமைச்சர் ஓட்டத்தில் முதல் நபராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருந்தார்.
ஆனால், முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி இருவரும் சேர்ந்து சசிகலாவிடம் பேசி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்தனர். ஓ.பன்னீர்செல்வத்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும்போது, அவரை அதிமுகவில் இணைத்து கொண்டு முதலமைச்சர் பதவியை வழங்கிய சசிகலாவை அக்கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
ஆனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என அப்போது பேசப்பட்டது. அப்போது இருந்தே ஒற்றை தலைமைக்கான வேலையை எடப்பாடி பழனிசாமி தொடங்கி விட்டார். தர்மயுத்தம் சமயத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்த அனைவரையும் தன் பக்கம் இழுக்கின்ற வேலையை முதலமைச்சராக இருந்தபோது ஈபிஎஸ் மேற்கொண்டார்.
2017ஆம் ஆண்டு அணிகள் இணையும் போது கட்சிக்கு ஓபிஎஸ் எனவும், ஆட்சிக்கு ஈபிஎஸ் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் ஓபிஎஸ் மூலமாகவே ஈபிஎஸ்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது.
இறுதியில் ஆட்சியை இழந்த அதிமுக எதிர்க்கட்சியானது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஓபிஎஸ் ஏற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதையும் ஈபிஎஸ் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ், சில மாதங்கள் ஒருங்கிணைப்பாளர் பதவியோடு பயணம் செய்து கொண்டிருந்தார்.
ஒற்றை தலைமையாக உருவெடுக்க நினைத்த எடப்பாடி பழனிசாமி சரியான நேரம் பார்த்து கொண்டிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் முதலில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் பெயர்கள் இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தர்மரை மாநிலங்களவை உறுப்பினராக்கினார்.
இதனால் ஜெயலலிதா பாணியில் ஒரு தொண்டரை ஓபிஎஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்தார் என பேசப்பட்டது. இதனால் ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் கடும் கோபத்தில் இருந்தார். இதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த ஈபிஎஸ், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாதவரம் மூர்த்தியை வைத்து ஒற்றை தலைமை பிரச்சனையை கிளப்பினர்.
அன்று தொடங்கி இன்று வரை ஒற்றைத்தலைமை பிரச்சனை முடிவுக்கு வருவதற்கு ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்த ஒரு ஆண்டில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக உருவெடுப்பதற்கு மிக முக்கிய காரணமாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றங்களை நாடியுள்ளார். இதில் பொதுக்குழு செல்லது என ஒற்றை நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் ஓபிஎஸ் தோல்வியை தழுவியுள்ளார்.
தொடர்ந்து ஓபிஎஸ் தொடுத்த சட்டரீதியான நகர்வுகளில் அனைத்தையும் தனது குழுவின் மூலம் தோற்கடித்தவர் சி.வி.சண்முகம். எதிரியை வீழ்த்துவதற்கு எதிரியின் செயல்பாடுகளை கண்டறிய வேண்டும் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு பக்க பலமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் முனுசாமி.
இவர், ஓபிஎஸ் அருகில் பயணம் செய்ததால் அவர் எப்படி செயல்படுவார், அடுத்தது என்ன செய்வார் என்பதை வியூகமாக அமைத்து எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க அதற்கு ஏற்றார் போல் செயல்பட்டு ஓபிஎஸ்ஸின் வியூகங்களை ஈபிஎஸ் முறியடித்தார். பெரும்பான்மை பொதுக்குழு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெற டெல்லி பாஜகவின் கடைக்கண் பார்வை எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது.
அதற்கான வியூக்கத்தை அமைத்துக் கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கடந்த ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, டெல்லி பாஜக மேலிடத்தில் தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்தி வைத்திருந்தார். அந்த செல்வாக்கை பயன்படுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க சில வேலைகள் நடத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மிக்க மகிழ்ச்சி. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒன்றரை கோடி தொண்டர்களும் வியூகம் அமைத்தார்கள்" என கூறினார்.
இது குறித்து பேசிய பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “பெரும்பான்மை அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, சண்முகம், வேலுமணி போன்ற பல தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்" என கூறினார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி என்னாச்சு? கொடநாடு சம்பவம் என்ன ஆச்சு? சட்டப்பேரவையில் ஆவேசமான முதலமைச்சர் ஸ்டாலின்!