சென்னை: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் புதியதோர் முயற்சியை நிகழ்த்தியுள்ளார், நடிகர் 'விஜய்' (Actor Vijay). கிட்டத்தட்ட 13 மணி நேரம் தனி ஒருவனாக நின்று அத்தனை மாணவர்களுக்கும் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். கேரவன் இல்லை, டச் அப் இல்லை, இயக்குநர் இல்லை, ஆக்ஷன் கட் இல்லை. இப்படி எந்தவொரு நடிகரும் இதுநாள் வரை செய்யாத செயலை செய்து பேசுபொருள் ஆகியுள்ளார்.
நடிகர் விஜய் 'தளபதி' (Thalapathy) என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படுபவர். தமிழ் சினிமாவின் இன்றைய அளவில் சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமா மார்க்கெட்டில் ஓடும் குதிரை விஜய். தயாரிப்பாளர்கள் தேடும் நடிகர். இப்படி எத்தனையோ பெருமைகளை தன்னிடத்தில் வைத்துள்ளவர். தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நல்லது செய்து வருகிறார். மாநிலம் தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. பால் கொடுப்பது, உணவு வழங்குதல் என உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் மனதில் அரசியல் எண்ணம் துளிர்விட்டுள்ளது.
இதனால், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். முன்னதாக, நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' (Vijay Makkal Iyakkam) சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் கணிசமான அளவில் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இது விஜய்க்கு புது உற்சாகம் அளித்தது. உடனடியாக விஜய், அவர்களை வரவழைத்தும் பாராட்டியுள்ளார். சமீபத்தில் மாநிலம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில், இது நடத்தப்பட்டது. உலக பட்டினி தினத்தை (World Hunger Day) ஒட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இப்படி மெல்ல மெல்ல தனது காய்களை நகர்த்தி வந்தார், விஜய். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்க விஜய் முடிவு செய்தார். இதற்காகத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளைத் தேர்வு செய்யப்பட்டது. அவர்களை நேரில் அழைத்துப் பாராட்ட விஜய் முடிவு செய்தார். இதற்காக மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை வரவழைக்கப்பட்டு அவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி (Thalapathy Vijay Education Award Ceremony 2023) நேற்று நடைபெற்றது.
தொகுதிக்கு 6 பேர் என்றால் கிட்டதட்ட 1400 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். காலை 10.30 மணிக்கு வந்த விஜய், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலாவதாகத் திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு 'வைர நெக்லஸ்' (Diamond Necklace) பரிசளித்தார். இதனைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். கிட்டதட்ட 13 மணி நேரம் நின்று அத்தனை பேருக்கும் பரிசு வழங்கினார். எந்தவித முக சுழிப்பும் இல்லாமல் அவர்கள் சொன்ன வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு நீண்ட நேரம் நின்றார். இதனால், சமூக வலைத்தளங்களில் விஜய்க்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில், இதுபோன்று யாரும் இதுவரை செய்ததில்லை என்பதே உண்மை. இதனை விஜய் அரசியலாகப் பார்க்கிறாரா? அல்லது அரசியல் ஆக்கப் பார்க்கிறாரா? என்றவாறு ஒருபுறம் விவாதிக்கப்பட்டாலும் இத்தனை மணி நேரம் நின்று தனக்காக வந்த மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களை மகிழ்வித்ததே ஒரு சாதனை தான் எனலாம். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் இப்படிச் செய்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.