சென்னை:சுதந்திரப் போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா இன்று (நவ.15) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியதாகக் காணப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பொற்று வந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அவரின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறை வாழ்கையும் கம்யூனிஸ்ட் சிந்தனையும்: 8 வருடம் சிறை வாழ்க்கை 5 வருடம் தலைமறைவு வாழ்க்கை என இவரது இளம் பருவம் கடந்தது. அவ்வளவு ஏன் தோல் நோய் வந்த நிலையிலும் மருத்துவரை கூட நேரில் சென்று உடல்நிலையை கவனிக்க முடியாத நிலையில் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் தான் சங்கரய்யா.
சென்னை - வறுமையின் நிறம் சிவப்பு அல்ல வறுமையை போக்க வந்த நிறமே சிவப்பு என கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான சங்கரய்யா சட்டமன்றத்தில் முழங்கிய வார்த்தைகள் இதுதான். பிரதாப சந்திரன் என்ற இயற்பெயரை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என்.சங்கரய்யா தூத்துக்குடி ஆத்தூரை சேர்ந்தவர்.
கம்யூனிஸ்ட் தோழர்களால் என்.எஸ்.என்று அழைக்கபட்டவர்தான் இவர், தனது தாத்தாவின் பெயரை தனக்கு சூட்ட வேண்டும் என்று வீட்டிற்குள்ளே போராட்டத்தை தொடங்கி அதில் வெற்றியை கண்டவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் போராட்டத்தில் கழித்த சங்கரய்யாவின் முதல் போராட்டமே இந்தி திணிப்பை எதிர்த்து தான். அதன் பின்னர் ஆங்கிலேய ஏகாதியபத்திற்கு எதிராக போராட்டம், சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்கத்தை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள்.
மாணவ பருவத்திலேயே இடதுசாரி இயக்கங்கள் மீது விருப்பம் கொண்டிருந்தார் சங்கரய்யா. 1940களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது மாணவர் சங்கம் மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக கலக குரல் எழுப்பினார். அதை தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை அழைத்து வந்து மாணவர்கள் மத்தியில் விடுதலைக்கான விதையை விதைத்தார்.
அதற்கு பரிசு பெற்று பி.ஏ இறுதி தேர்வுக்கு 15 நாட்கள் முன்பாகவே சிறைவாசம். 18 மாதங்கள் சிறையின் பிடியில் இருந்து மறுபடியும் ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுத்த போது மீண்டும் சிறையில் தள்ளப்பட்டார். அப்போது மாணவர்களால் இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவே அவரை விடுதலை செய்தது பிரிட்டிஷ் அரசு.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால் நான்கு ஆண்டுகள் சிறை, சுதந்திர இந்தியாவில் ஆளும்வர்க்கத்தை எதிர்த்து நின்றதால் நான்கு ஆண்டுகள் என எட்டு ஆண்டுகள் சிறைவாசம். ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்தது என போராட்ட களமாகவே தனது வாழ்நாளை நகர்த்தி சென்றவர். குறிப்பாக சலவை தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்து அங்கிருந்தே போராட்டங்களை முன்னெடுத்த நிகழ்வுகளும் உண்டு.