சென்னை:தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. இவர் நேற்று முன்தினம் விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியானவர் பி.கே.ரவி. இவர் தமிழ்நாடு மாநில டிஜிபிகான போட்டியில் இடம் பெற்றிருந்தார். முதல் இடத்தில் சஞ்சய் ஆரோராவும், இரண்டாம் இடத்தில் பி.கே. ரவியும் இடம் பிடித்திருந்தனர்.
இந்த நிலையில் பி.கே.ரவிக்கு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக பதவி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு தீயணைப்பு துறை டிஜிபியாக பி.கே.ரவி பணியாற்றிபோது தமிழக அரசு இவரை காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில் பி.கே.ரவியின் பதவிக்காலம் மூன்று மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இவர் தமிழகத்தில், விருதுநகர், பரமக்குடி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் காவல்துறையில் முக்கிய பதவியில் பணியாற்றி உள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிச் சந்திப்பு பதக்கத்தை இரண்டு முறை வென்றுள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலும் பணியாற்றினார்.