தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பை உருவாக்க திட்டம்? - என்ஐஏ விசாரணை

சேலத்தில் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டி வந்தவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.

சேலத்தில் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பை உருவாக்க திட்டம் - விசாரணையை முடுக்கிய என்ஐஏ!
சேலத்தில் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பை உருவாக்க திட்டம் - விசாரணையை முடுக்கிய என்ஐஏ!

By

Published : Aug 4, 2022, 9:04 AM IST

சென்னை: சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பட்டதாரி இளைஞரான நவீன் சக்கரவர்த்தி. இவருடைய நண்பர் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ். இவர்கள் இருவரும் சேர்ந்து சேலம், செட்டிச்சாவடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். அங்கு யூடியூப் பார்த்து சொந்தமாக துப்பாக்கி தயாரித்து வந்துள்ளனர்.

இவ்வாறு துப்பாக்கி தயாரிப்பதற்கான அனைத்து கருவிகளையும் வாடகை வீட்டில் வைத்திருப்பதோடு, வெடி மருந்துகளையும் பதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் வாகன தணிக்கையின்போது சந்தேகத்தின் பேரில் இரண்டு வாலிபர்களையும் பிடித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான கருவிகள், கத்தி, முகமூடிகள் மற்றும் வெடி மருந்துகள் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் ஆகிய இருவரிடமும் நடத்திய விசாரணையில், “சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் கல்குவாரிகளுக்காக மலைகள் தோண்டப்படுகிறது. எனவே இயற்கையை அழிப்பதை தடுப்பதற்காகவும், கற்களை ஏற்றி வரும் லாரிகளை வெடி வைத்து தகர்ப்பதற்காகவும் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களை தயாரித்தோம்” என தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் அடிப்படையில், இருவரையும் கைது செய்த காவல்துறையினர், பின்பு சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இருவரிடமும் மேலும் விசாரணை நடத்துவதற்காக, ஓமலூர் காவல்துறையினர் இரண்டு நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது கிடைத்த தகவலின் படி, இவர்களுக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நண்பனான சேலம் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்த கபிலர் என்ற பட்டதாரி இளைஞரை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தை, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அலுவலர்கள் விசாரணைக்காக கையில் எடுத்துள்ளனர்.

அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை போன்று ஒன்றை உருவாக்கவும், ஆயுதப் போராட்டம் நடத்த திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தடை செய்யப்பட்ட அமைப்புடனான தொடர்பு குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருக்கும் மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கல்குவாரியில் இருந்த வாகனம் தீ வைப்பு - நாம் தமிழர் கட்சியினர் மீது குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details