சென்னை:ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹேம்நாத் (வயது 24) தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விசா கேட்டு சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் விண்ணப்பித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் நேர்முகத் தேர்விற்காக ஹேம்நாத் சென்னை வந்துள்ளார்.
அப்போது அவரது ஆவணங்களைச் சரிபார்த்த அதிகாரிகள் ஹேம்நாத் தாக்கல் செய்த பி.டெக் சான்றிதழ்கள் போலியானது எனக் கண்டுபிடித்தனர். இது குறித்து அமெரிக்கத் துணை தூதரக அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாணவன் ஹேம்நாத்தைப் பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டை பிரகாஷ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஹரிபாபு என்பவர் போலி மதிப்பெண் சான்றிதழ்களைத் தயார் செய்து கொடுத்ததாகத் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் துணை ஆணையர் செந்தில்குமாரி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டைக்குச் சென்று ஹரிபாபு(35) என்ற நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.